சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விளையாட்டு சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கமலினியின் வெற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திறமையான விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அரசின் நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.



