சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் நாளை (செப்டம்பர் 21) அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைமைச் செயலாளர், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, நீர்நிலைகளை தூர்வாருதல், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலவீனமான மின்கம்பங்கள் மற்றும் மழைக்காலத்தில் பாதிக்கக்கூடிய உள்கட்டமைப்புகளை சீரமைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்.



