சென்னை: தமிழகத்தில் புதிய உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதுடன், 2,000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற முதலீட்டு சந்திப்புகளின் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கான GCC-ஐ அமைத்து நிர்வகிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு வழிகாட்டி நிறுவனமும் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த உலகளாவிய திறன் மையம் சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள GCC காரிடார் பகுதியில் அமைய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், உலகளாவிய செயல்பாடுகள் மற்றும் உயர்திறன் பணிகளுடன் தொடர்புடைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், ஸ்வீடனைச் சேர்ந்த Sigma Technology Group நிறுவனமும் தனது இந்திய நிறுவனமான Sria Solutions மூலம் சென்னை மற்றும் திருச்சியில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் Embedded Systems, மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் பயணத்தின் போது தமிழகத்தில் உற்பத்தி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவற்றின் மூலம் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



