தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளில் அதிரடி சோதனை: 5 நாட்களில் ரூ.59.02 லட்சம் வசூல்!

top-news

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தணிக்கையில், 5 நாட்களில் ரூ.59.02 லட்சம் வரி மற்றும் இணக்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் சோதனை செய்யப்பட்டு, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்தல், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்குதல், தகுதிச்சான்று மற்றும் சாலை வரி தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட ஆம்னி பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களுக்காக அபராதம் மற்றும் இணக்கக் கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டை பேருந்து உரிமையாளர் ரத்து செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதை மீறும் பேருந்துகளின் அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.