சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் நிறுவுதல், ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகளை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வலப் பாதைகள் மற்றும் சிலை கரைக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
சென்னையில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலைகளை நிறுவுவதற்கு நில உரிமையாளர்களின் அனுமதி, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியத்தின் தடையில்லா சான்று உள்ளிட்ட தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களால் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிலைகள் நிறுவப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதுடன், பாதுகாப்புக்காக தன்னார்வலர்களையும் நியமிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஊர்வலங்கள் போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்தல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான முழக்கங்கள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விழா மற்றும் ஊர்வலத்தின் போது பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும், அவசரநிலை அல்லது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதால், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தமிழக அரசு கூடுதல் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது.



