தமிழ்நாடு

பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை: பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

top-news

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பகுதிகளுக்கு வரும் சிலைகளை மாற்று இடங்களுக்கு அனுப்புவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய இடங்கள் சிலை கரைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகள் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் வருவதுடன், ஆமைகள் இனப்பெருக்கம் நடைபெறும் முக்கியமான சுற்றுச்சூழல் பகுதிகள் என்றும் சுட்டிக்காட்டியது. இதனால் அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு பகுதிகளுக்கு கொண்டு வரப்படும் சிலைகளை, அனுமதிக்கப்பட்ட மற்ற கரைப்பு இடங்களுக்கு ஏன் மாற்றக்கூடாது என தீர்ப்பாய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், சிலைகளை மாற்றும்போது சட்டம் ஒழுங்கு, கூட்ட நெரிசல் மற்றும் மத ரீதியான பதற்றம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டது.