லண்டன்: தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள முதல்-அமைச்சர் விஜய், இன்று லண்டனில் நடைபெறும் புகழ்பெற்ற கார் பந்தயத்தைப் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தைச் சென்றடைந்த அவருக்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெறும் 'மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை' கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தப் போட்டியில் முன்னணி நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சர்வதேசப் போட்டி மேலாண்மை முறைகளை முதல்-அமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
இந்தப் பயணத்தின் மூலம் மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ள அவர், புதிய முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் ஈர்ப்பதற்கான பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்க உள்ளார்.



