அரசியல்

“தான்தோன்றித்தனமாக செயல்படக்கூடாது” : தமிழக அரசுக்கு பெ. சண்முகம் கண்டனம்

top-news

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக சீனிவாசபுரம் சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பெ. சண்முகம் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், புதிய தலைமைச் செயலகத்துக்கு பட்டினப்பாக்கம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், தமிழக நலன் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை பெற வேண்டும் என்றும், மற்ற கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பட்டினப்பாக்கம் பகுதி கடந்த காலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பெ. சண்முகம், புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்று இடங்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கிண்டி ரேஸ் கோர்ஸ் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களையும் மாற்று வாய்ப்புகளாக அரசு பரிசீலிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலைமைச் செயலகத்துக்கு இடநெருக்கடி இருப்பது குறித்து மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அதற்கான தீர்வாக பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்வது பொருத்தமானதல்ல என்பதே தங்களது நிலைப்பாடு என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.