அரசியல்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது இன்று நீதிமன்றத்தில் விசாரணை!

top-news

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

15 நாட்கள் நீதிமன்றக் காவல்: விசாரணைக்குப் பின்னர், தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அந்த மனுவை நிராகரித்த நீதிபதி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று ஜாமீன் மனு விசாரணை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சார்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தூத்துக்குடி நீதிமன்றத்தின் ஆன்லைன் பட்டியலில், ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக இடம்பெற்றுள்ளது.

இன்றைய நீதிமன்ற விசாரணையின் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.